இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல், தலைமைதாங்குதல் என்ற தலைப்பில், தனது இரண்டுகால பணிகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், வெங்கையா நாயுடு மற்றும் அமித்ஷாவை பற்றி பேசியது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதோடு அவர் பெயர் அழைப்பிதழில் இல்லை அப்படி இருந்தும் கலந்து கொண்டார் என்று விமர்சனம் எழுந்தது. இது பற்றி விசாரித்த போது, நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு அழைக்கபட்ட போது, மும்பையில் தர்பார் சூட்டிங்கில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று ரஜினி தரப்பு கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் கனமழை காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில் விடுத்த வேண்டுகோளை ஏற்று படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள மும்பையில் இருந்து கிளம்பி வந்தார்.
அதனால் தான் அவர் விழா ஆரம்பித்த பின் சில நிமிடங்கள் கழித்து விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மழையால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு ரஜினி விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று கூறினார் என்பது குறிப்படத்தக்கது. அதே போல் அந்த அழைப்பிதழில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பெயரும் இடம் பெறவில்லை.