பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தாய்மொழி தினமான கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கினார். இன்று 28.02.23 மாலை மதுரையில் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல்லில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசும்போது, “நமது வீடுகளில் பிற மொழி கலந்த பேச்சுதான் 95 சதவிகிதம் பேசி வருகிறோம். ஐந்து சதவிகிதம் தான் தமிழில் பேசுகின்றோம். இதனை மாற்ற குழந்தைகளில் இருந்தே பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளில் தமிழில் பேச கற்றுத் தர வேண்டும். உயிருக்கு உயிரான தமிழ் மொழியை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கின்றோம். வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றது. அதற்காகத்தான் இந்த பரப்புரை பயணம். தமிழ்நாட்டில் வீடுகளில் பேசக்கூடிய பத்து வார்த்தைகளில் ஐந்து வார்த்தை தமிழ் மொழி மற்றவை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் பேசும் நிலைமை தற்பொழுது உள்ளது.
தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமே அழியும். இதன் உண்மைத்தன்மையை பலரும் அறியவில்லை. அதனால் தான் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் அப்துல் கலாம் உட்பட பல பேரறிஞர்கள் பலர் தமிழில் தான் படித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து படிப்புகளும் தமிழில் படிக்க முடியும். தமிழை கட்டாய பாட மொழியாக்க வேண்டும் என அரசு சட்டங்கள் போட்டாலும் ஒரு சில பள்ளிகள் இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். தமிழை அழிக்க உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு செல்லாதீர்கள் என பள்ளி நிர்வாகத்தை பார்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டுக் கொள்வோம். அதையே மீறி அவர்கள் சென்றால் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களை சும்மா விடமாட்டார்கள்.
வன்முறையைத் தூண்டுவதற்காக இதை நான் பேசவில்லை. தமிழில் படிக்க வேண்டும் என தமிழக அரசு போடுகின்ற சட்டத்தை மதிக்க வேண்டும். இதை எதிர்த்து ஒரு சில பள்ளிகள் நீதிமன்றம் செல்கின்றனர் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கல்வியை வணிகம் செய்து வருகின்றனர். பள்ளிகளில் PRE KGக்கு 2 இலட்சம் வசூல் செய்கிறார்கள். தமிழைக் கொல்ல பள்ளிகளை நடத்துகின்றனர். அதற்கு பள்ளிகளை மூடிவிட்டு பொறி கடலை வியாபாரம் செய்யலாம். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல” என்று கூறினார்.