Skip to main content

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்