வடக்கில் இருப்பவன் வாழ வேண்டும் தெற்கில் இருப்பவன் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்படுவதுபோல் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டிடத்திற்கு ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இதுவரை கஜா புயல் நிவாரணம் வழங்கவில்லை என்பது உண்மைதான். தமிழக அரசு இதுவரை 1400 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளை மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.
இது மிகப்பெரிய பேரிடர். ஆனால் இதுவரை மத்திய அரசு பேரிடராக அறிவிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மனிதநேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. வடக்கே இருப்பவன்தான் வாழ வேண்டும், தெற்கே இருப்பவன் சாக வேண்டும் என்று எண்ணுகிறார்களோ என்ற நிலைப்பாடுதான் எங்களைப்போன்றவர்களுக்கு வருகிறது. இவ்வாறு கூறினார்.