அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க ஓபிஎஸ் வாக்களித்தார்” எனக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழலில் நான் தர்ம யுத்தத்தைத் துவங்கி இருந்தேன். யாருக்காகத் தர்மயுத்தம். யாருக்கு எதிராக என்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சூழ்நிலையில் பழனிசாமி முதல்வராக இருந்தார். பழனிசாமி முதல்வராக இருந்ததை எதிர்த்துத்தான் வாக்களித்தேன். இதை ஏற்கனவே பல கூட்டத்தில் கூறியுள்ளேன். அதற்குப் பின் வேலுமணி, தங்கமணி ஆகியோர் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார். அப்படி அவர் கொண்டு வரும்பொழுது திமுக மற்றும் டிடிவி உடன் உங்கள் ஓட்டும் சேரும்பொழுது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.
அந்தச் சூழலில்தான் பழனிசாமி தரப்பினரும் சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டனர். இந்நிலையில் டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு நான் ஆதரவளித்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அரசு 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டதற்கு நான் தந்த ஆதரவுதான் காரணம் அதுதான் உண்மை. அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நான்கரை வருடங்கள் அவர் செய்த ஜனநாயக விரோதச் செயல்களை, என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று செயல்பட்டதை உங்கள் முன்னால் சொல்லுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன். பட்டியல் போட்டும் வைத்துள்ளேன். உரிய நேரத்தில் அவை வெளியிடப்படும்.
துணை முதலமைச்சர் என்ற பதவியை எடப்பாடி எனக்குத் தந்தாராம். அவருக்கு முதலைச்சர் பதவியைக் கொடுத்தது யார். தவழ்ந்து வந்த பழனிசாமியை எழுப்பிவிட்டுத் தட்டிக் கொடுத்து முதல்வர் பதவியை அவருக்குத் தந்தது யார். சசிகலா. அந்த சசிகலாவை இவர் எந்த அளவிற்கு விமர்சனம் செய்தார். ஆகவே நம்பிக்கைத் துரோகி யார் என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது.” எனக் கூறினார்.