Skip to main content

தமிழக அரசியலில் கோமளவல்லி என்கிற பெயரை முதலில் பயன்படுத்தியது யார்?

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
evks-jayalalitha



சர்க்கார் திரைப்படத்தில் வரும், 'கோமளவல்லி' என்கிற பெயர் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் இயற்பெயர் தான் கோமளவல்லி என்றும், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் நோக்கத்திற்காகவே அந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிமுக அமைச்சர்களின் கோபம்.
 

சரி, இது அவர்களின் பிரச்சனை. இருந்து விட்டுப் போகட்டும்! 
 

கோமளவல்லி என்கிற பெயர், இந்த படத்தின் மூலம் தான் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறதா? இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த பெயர் முன்மொழியப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. 
 

2002ல் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது. இந்த இணைப்பு விழா மதுரையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சோனியாகாந்தி, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை மக்கள் விரோத அரசு என்று விமர்சித்ததோடு, இனி எந்தக் காலக்கட்டத்திலும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார். 
 

இதனால் கடும் கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா. அடுத்த ஒரு மாதத்தில் டெல்லி சென்ற ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக துடிக்கிறார் அண்டோனியா அல்பினா மையினோ. அது நடக்காது என்றார். சோனியா பெயரை சொல்லாமல் விமர்சித்தார். சென்னை திரும்பியதும் இதேபோல் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதாவின் இந்த விமர்சனம், தமிழக கதர்சட்டையினரை ஆவேசப்பட வைத்தது. 
 

அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சத்தியமூர்த்திபவனில் அவசர பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி, ஜெயலலிதாவின் விமர்சனத்தை கண்டித்ததோடு, ஜெயலலிதாவை கோமளமல்லி என்கிற அம்மு என்கிற ஜெயலலிதா என பதிலடி தந்தார். பரபரப்பாக பேசப்படும் அந்த பெயரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

 

கோமளவல்லி என்பதுதான் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும் சுட்டிக்காட்டி பதிலடி தந்தார் இளங்கோவன். அவரின் இந்த பதிலடியை தொடர்ந்து, சோனியாவை விமர்சிப்பதை தவிர்த்தார் ஜெயலலிதா. இளங்கோவன் மூலம் தமிழகத்தில் பரபரப்பான கோமளவல்லி என்ற பெயர், பல வருடங்களுக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாசால் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்