வேலூர் மாநகர மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசும்போது, “காமராஜர் பிரதமர் ஆவதை நாங்கள் தடுத்து விட்டோம் என பாஜகவினர் கூறுகிறார்கள். காமராஜருக்கு திமுககாரர்கள் செய்தது போல காங்கிரஸ்காரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள். காமராஜருக்காக தான் பதவியில் இருந்தவர் கலைஞர் என்பதை அமித்ஷா போன்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜர் இறந்த பிறகு அவரது உடலை நல்லடக்கம் செய்வது குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் காங்கிரசாரை அழைத்துப் பேசினார். அப்போது ஒவ்வொரு கோஷ்டியினரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தார்கள். ஆனால் காமராஜர் உடலை அரசு மரியாதையோடு ராஜாஜி ஹாலில் வைத்து காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்தவர் கலைஞர்.
காமராஜரை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை. ஆனால் எனக்கு உண்டு. ஏனென்றால் நான் அப்போது 10வது படித்து வந்தேன். அமித்ஷா ஒரு கை குழந்தை. அமித்ஷா கயிறு திரித்து விட்டு போகிறார். வேலூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில் 2ஜி, 3ஜி, 4ஜி எனப் பேசி இருக்கிறார். ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த ஜியாலும் எங்கள் கால் செருப்பில் உள்ள தூசியைக் கூட தொட முடியாது. 2ஜியில் உங்களால் நிரூபிக்க முடிந்ததா? நீதிமன்றமே உங்களைத் திட்டியது. திமுகவுக்கு ஓட்டு போட்டால் கலைஞரின் பிள்ளையும் பேரனும்தான் வாழ முடியும் என குடும்ப அரசியல் குறித்து மோடி பேசியுள்ளார். மோடி எங்களை பற்றியும், குடும்ப அரசியல் பற்றியும் பேசிக்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யாரை அமைச்சராக நியமிக்கிறாரோ அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. ஒரு மந்திரி சபையில் ஆளை சேர்ப்பதும், நீக்குவதும் ஒரு மாநில முதல்வர் பணி. ஆனால் இன்றைக்கு அதிகப்பிரசங்கித்தனமாக ஆளுநர் ரவி செந்தில் பாலாஜியை நீக்கியிருக்கிறார். செந்தில்பாலாஜி வழக்கு எப்போது போடப்பட்டது. இத்தனை காலம் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க. உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததை செந்தில் பாலாஜி தப்பு பண்ணதாக ஆளுநர் சொல்கிறார். வாய்கொழுப்பால் தான் ஜெயலலிதா நான் போட்ட வழக்கால் டான்சி புகாரில் உள்ளே போனார்.
அமித்ஷா அவர்களின் ஏஜென்டாக செயல்படுபவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார் மோடி. குடும்பம் நடத்தியவர்களுக்குத்தான் குடும்பம் பற்றி தெரியும். மோடியின் மனைவியை ஏன் போலீஸ் பாதுகாப்போடு தனியாக வைத்துள்ளீர்கள்? என்ன காரணம்? இதையெல்லாம் அரசியலில் பேச ஆரம்பித்தால் நாறிப் போய்விடும். நாகரீகமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆளுநருக்கு சொல்கிறேன், திமுகவின் சட்டத்துறை பற்றி உங்களுக்கு தெரியாது. போட்ட அத்தனை வழக்கிலும் வென்றவர்கள் திமுகவினர்.
இதயம் இல்லாத ஓர் ஆள் யார் என்றால் அது எடப்பாடி தான். மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்காமல் அலைக்கழித்து அரசு வழக்கறிஞரை விட்டுவிட்டு தனியாக அதிக பணம் கொடுத்து பிரத்தியேகமாக வழக்கறிஞர்களை வைத்து வாதாடியவர் எடப்பாடி. கலைஞருக்கு இடம் கிடைத்தது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நடந்தது யாருக்கும் தெரியாது. கலைஞருக்கு இடம் பெறுவதை ஒரே ராத்திரியில் நீதிமன்றம் சென்று வாங்கியவர்கள் நாங்கள். இதெல்லாம் ஆளுநர் ரவி அவர்களுக்கு தெரியாது.
ஆளுநரைப் பார்த்து கேட்கிறேன், எந்த அடிப்படையில் இந்த நோட்டீஸை கொடுத்தாய்? நீ யார் நோட்டீஸ் கொடுக்க? மந்திரி சபையை அமைக்கும் அதிகாரம் எந்த காலகட்டத்திலும் ஆளுநருக்கு கிடையாது. இப்போதுதான் ஆளுநருக்கு கேடுகாலம் ஆரம்பித்துள்ளது. நாளைய தினம் நான் அந்த நோட்டீசை வாங்கிக் கொண்டு ஆர்ட்டிகல் 32 பிரிவின்படி எப்படி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநரை காப்பாற்ற முடியாது. நான் சொன்னால் அது நடக்கும். நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடரும் போது நரேந்திர மோடியாலும் கவர்னரை காப்பாற்ற முடியாது.
இன்றைக்கு மணிப்பூரில் ராகுல் காந்தியை உள்ளே விடாமல் தடுத்திருக்கிறார்கள். நாளைய தினம் இந்தப் பிரச்சனை, அந்தப் பிரச்சனை எல்லாம் சேர்ந்து அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரளயம் ஏற்படப்போகிறது. அந்தப் பிரளயத்தில் மோடியின் ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கிறது எனக் கருதாதீர்கள். நீதிமன்றங்கள் நினைத்தால் உன்னுடைய ஆட்சியை கலைக்கும் அதிகாரம் உள்ளது. ஏன் உங்களுக்கு இவ்வளவு அவசரம். எங்களுக்கு தேவை என்றால் மந்திரி சபையில் வைத்துக் கொள்வோம், இல்லையென்றால் எடுத்து விடுவோம். அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை.
ஒரு சட்ட ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம். கழகத் தோழர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வரும் காலம் பயங்கரமான காலமாக இருக்கும். எதையும் செய்யும் அளவிற்கு மோடி துணிந்து விட்டார். ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அபரிமிதமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தினுடைய தலைவராக தான் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இனி நீங்கள் இப்படிப்பட்ட சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து எங்களை நசுக்குவீர்கள். ஆனால் மோடி உட்கார்ந்த இடத்தில் ஸ்டாலினை நீங்களாகவே கொண்டு போய் உட்கார வைக்க வேண்டாம்'' எனக் காட்டமாகப் பேசினார்.