'நீட் தேர்வு' பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம், இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில், மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை இன்று (அக். 31ந் தேதி) நடைபெற்றது.
அதில், கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும். நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 848 பேர் பயிற்சிக்காகப் பதிவு செய்திருந்தனர். நேற்று மட்டும் கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது அரசுப் பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், மருத்துவராக வேண்டும் என்ற ஊக்கம் உருவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது.
நேற்று, மருத்துவக் கல்விக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தமிழக முதலமைச்சரை அவர் பாராட்டியுள்ளார். இந்த அரசு சட்டத்தின் மூலம், 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 5.25 லட்சம் மாணவ மாணவிகள் அரசுப் பள்ளியில் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். தற்பொழுதுள்ள சுற்றுச்சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. திறந்தவெளியில் பள்ளிகள் நடத்தினால் மாணவ மாணவிகள் வெயிலிலும் பனியிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.