அதிமுக கொறடா ராஜேந்திரன் தமிழக சபாநாயகர் தனபாலிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ,அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் அமமுகவில் பொறுப்பு வகிப்பதாகவும் அதிமுகவுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகவும் எனவே இந்த மூன்று பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினர் பிரபு எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்கவில்லை. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளோம். அமமுக என்பது அதிமுகவின் அங்கம்தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.
எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டிஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன். அதிமுக எம்எல்ஏ வாக தான் செயல்படுகிறேன். நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்துவிடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின்படியே செயல்படுவேன். அதிமுகவை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை அதிமுக நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர்தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதுதான் அதிமுகவில் உள்ள அனைவரின் எண்ணம். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடு படுவோம்” என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.