Published on 09/07/2019 | Edited on 09/07/2019
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக போராட்டடம் நடத்தி வருபவர். சமீபத்தில் முகிலன் காணாமல் போனதாக நடத்திய போராட்டம், கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான போராட்டம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , தொடர்ந்து ஒரு ஜாதிக்கு எதிராகவும் தேவையில்லாத கருத்துகளை திணித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாகவும் திருமுருகன்காந்தி மீது வழக்குகள் தொடரப்பட்டன.
திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.நீதிபதி பேசுகையில் அவருடைய பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவர் மீது காவல் துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருக்கிறது. அவர் பின்னால் இருந்து யாரேனும் இயக்குகிறார்களா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.