Skip to main content

பாஜகவுடன் திமுக ஏன் நேரடியாக மோதவில்லை: சீமான் கேள்வி

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.

 

திரைத்துறையில் இருந்து வந்தவர் நீங்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் பாஜக வேண்டாம் என்கிறார்கள். மேலும் சிலர் இந்த நேரத்தில் பாஜகவும் வேண்டாம், காங்கிரஸூம் வேண்டாம் என்று சொல்வதே இயல்பாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இருக்கிறது என்கிறார்களே?

 

seeman


 

அது சுத்த பைத்தியக்காரத்தனம். காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு மாற்று சொல்லுங்கள். மதவாதத்திற்கு நாங்கதான் எதிர் என்று பேசுகிறது திமுக. முதலில் பாஜகவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த கட்சி அது. ஒன்றுமே இல்லாததை ஒன்றாக்கியது யார்?
 

சில நிபந்தனைகளோடதான் அந்த கூட்டணி அமைந்தது?
 

நிபந்தனை நிபந்தனை என்று பேசக்கூடாது. செஞ்சீங்களா இல்லையா? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடினீர்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் அதனை கொண்டு வரும்போது ஆதரித்தீர்கள். இங்க எதிர்த்துவிட்டு, அங்கு ஆதரித்துள்ளீர்களே என்று கலைஞரிடம் கேட்கும்போது, மதவாத சக்திக்கு எதிராக வந்துவிடும் என்றார். இரண்டு மாதம் கழித்து ஏற்காடு இடைத்தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜகவிடம் ஆதரவு கடிதம் கேட்டார். இது என்ன மதவாத எதிர்ப்பு. 

 

இந்த மண்ணில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது. எத்தனை இடங்களில் திமுக நேரடியாக மோதுகிறது. தூத்துக்குடியில் கனிமொழியை அறிவித்த பிறகு, தமிழிசை அந்த தொகுதியில் நின்றுவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் நிற்கிறார்கள். மற்ற நான்கு இடங்களில் ஏன் உதயசூரியன் சின்னத்தில் நேரடியாக யுத்தம் செய்து நிற்கவில்லை. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செஞ்சீங்கல்ல ஏன் போட்டியிடவில்லை. சிவகங்கையிலும், நாகர்கோவிலிலும் என்ன செய்தீர்கள். கூட்டணிக்கு கொடுத்துவிட்டு விலகிவீட்டீர்கள். மற்ற இரண்டு இடங்களை முஸ்லீம் லீக் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டீர்கள். 
 

ஒரு போர் வீரன் யுத்தத்திற்கு நேரடியாக போக வேண்டும். வேற ஆளை அனுப்பிவிட்டு நான்தான் எதிரின்னு சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்கிறது. ஒன்றுமில்லாதவனை அடிக்க ஏன் ஊரை திரட்டுக்கொண்டு வரணும். வடஇந்தியாவில் அவர்களை வீழ்த்துவதற்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் திட்டம் வைத்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி திட்டம் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். 
 

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது அதில் எந்த கருத்தை முன்வைப்பீர்கள். ஆட்சியின் சாதனையை சொல்லுங்கள். மதவாதம் என்று நீங்கள் பேசாதீர்கள். உங்க ஜெகத்கஸ்பர் எழுதுகிறார் கிருத்துவ மக்கள் எல்லோரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று. இதை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் இங்கு போகிறார்கள். நாம் பாஜகவுக்கு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய மறைமுக வளர்ச்சி. 

 

mkstalin


 

திமுகவிலும் இந்துக்கள் இருக்கிறார்களே?
 

BJPயின் B டீமே திமுகதான். வருபவர்களை நீங்க எப்படி பார்க்கிறீர்கள். மதமாக பார்க்கிறீர்கள். அப்போது நீங்களும் பிஜேபிதானே. 90 விழுக்காடு இந்து என்று ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். வருபவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று பார்க்கிறீர்கள். நீங்க ஏன் ஒரு சீட்டுக்கூட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவில்லை. அப்போது நீங்களும் பிஜேபிதானே. பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது. இதற்கு பிறகு கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டு விழாது என்று அது முடிவு செய்துவிட்டது. அதனால் அதிமுக சீட்டு கொடுக்கவில்லை. நீங்கள் ஏன் சீட் கொடுக்கவில்லை. உங்களுக்கும் பிஜேபிக்கும் வித்தியாசம் என்ன? 



 

கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி இருக்கிறதே?
 

கூட்டணி வைத்ததால் சீட். ஒரு சீட் கொடுத்ததால் நாடு எங்கும் உள்ள ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மண்புழுவை போட்டு மீனை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. மண்புழுவின் எடை என்ன. மீனின் எடை என்ன? இது எந்த மாதிரியான அணுகுமுறை. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்