Skip to main content

கோவில்களில் நியமன உத்தரவு இல்லாமல் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்கள்: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

chennai high court

 

 

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நியமன உத்தரவு இல்லாமல் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் இருந்து,  கோவில் நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிக்க, அறநிலையத்துறை சட்டத்தின் கீழ்,  ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதுபோல, கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதற்காக, செயல் அலுவலர்களை, அறநிலையத்துறை ஆணையர் நியமிக்க, அறநிலையத்துறை  சட்டம் வகை செய்கிறது.  செயல் அலுவலர்கள் நியமனத்துக்கு பல்வேறு நடைமுறைகளும் உள்ளன.

 

ஆனால், பல கோவில்களில் முறையான நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சட்டவிரோதமாகவும், அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாகவும், பதவியில் நீடித்து வருவதாகக் கூறி, இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் பட்டியலை, நியமன உத்தரவுடன் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் . நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்களாக பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் உள்ள கோவில் நிர்வாகத்தை, அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்