தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடர் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்க உள்ளது. பேரவையின் தினசரி நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்துவரும் சூழலில், இதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், "சட்டமன்றத்தில் அடுத்த 21 நாட்களுக்கு துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில் 'சட்டமன்ற நேரலை' என்பது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இது, வருத்தமளிக்கிறது. சட்டசபை நடக்கும்போது ஆளுங்கட்சிக்குச் சாதகமான, தேர்ந்தெடுத்த காட்சிகளைத் தொகுத்து ஊடகங்களுக்கு வழங்கும் “எடிட்டிங் ஜனநாயகம்” இன்னும் தொடர்வது அநியாயம்; ஜனநாயக விரோதம்.
முதல்வர் பேசினால் உடனுக்குடன் அந்த வீடியோ காட்சிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் பேசினால், காலையில் பேசும் காட்சிகள் மாலைதான் ஊடகத்திற்கே கொடுக்கப்படுகிறது. அதுவும், ஆளுங்கட்சிக்குச் சாதகமான முறையில் எடிட்டிங் செய்து கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வலுவான வாதங்கள், குற்றச்சாட்டுகள் அடங்கிய காட்சிகள் வெட்டி எறியப்படுகின்றன.
தாங்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த எல்.எல்.ஏ, சட்டமன்றத்தில் தங்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தாரா? இல்லை கம்ப்யூட்டரை பார்த்து கைதட்டிவிட்டு வருகிறாரா? என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் “சட்டமன்ற நேரலை"யை அறிவித்துவிட்டு இப்போது செயல்படுத்த திமுக தயங்குவது ஏன்..? தாமதிப்பது ஏன்..? தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வாதத்திறமை மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லையா..? தன்னுடைய மற்றும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் வாதத்திறமை மீது முழு நம்பிக்கை வைத்து சட்டமன்ற நேரலையை அமல்படுத்த முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். E-Budget போடும் சட்டமன்றம், விரைவில் நேரலையோடு கூடிய E-சட்டமன்றம் ஆகட்டும். ஜனநாயகம் செழிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.