சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தான் பேசும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் கூறும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திமுக ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது. காவிரி பிரச்சனையை, தான் தீர்த்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார், அது பொய்யானது. ஜெயலலிதா அரசுதான் காவிரி பிரச்சனையைத் தீர்த்தது.
காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது, அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை வெளியிட்டிருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும் ஆனால் பல்வேறு போராட்டத்திற்கு இடையே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது அதிமுக அரசுதான். எங்க தாத்தா, முப்பாட்டன் விவசாயக் குடும்பம். விவசாயம் செய்து வருகிறோம். நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் ஏற்படுகிறது? நான் ஊர்ந்து சென்று பதவியேற்றதாக சொல்கிறார் ஆனால் நான் நடந்து சென்றுதான் பதவியேற்றுக்கொண்டேன்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடியபோது பல்டி அடித்த ஸ்டாலின், போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறார். விவசாயிகள் விஞ்ஞான ரீதியாக விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. அதிமுக அரசு தனிச்சட்டம் இயற்றி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. விவசாயி மழை, வெயிலில் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். விவசாய நிலத்தைப் பார்க்க சிமெண்ட் ரோடு போட்டு சென்று பார்த்தவர் ஸ்டாலின். அவருக்கு விவசாயம் மற்றும் விவசாயிகளைப் பற்றி என்ன தெரியும்?
திமுக ஆட்சியின்போது மின்கட்டணத்தை ஒரு பைசா குறைக்க போராட்டம் நடத்தியபோது, விவசாயிகளைக் குருவி சுடுவதுபோல் சுட்டனர். இவர்கள் தற்போது விவசாயிகளைப் பற்றி பேசுகிறார்கள். வெயில், மழையில் பாடுபட்ட நான் உங்களைப் போல் கீழே இருந்துதான் மேலே வந்துள்ளேன். நாம் மேலே வருவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு தெரியும். ஸ்டாலின் உழைத்து வரவில்லை, மற்றவர்களின் உழைப்பில் வந்தவர். மேலும் நிர்வாகத்திறன் இல்லாதவர்.
தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பின்போது ரூ.242 கோடி நிவாரணம் கொடுத்தது ஜெயலலிதாவின் ஆட்சி. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு அதிக நிவாரணம் கொடுத்துள்ளது. இந்தப் பகுதியில் பருவம் தவறி ஜனவரி மாதத்தில் மழை பெய்தது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தகுந்த இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கியுள்ளது. ‘உழவன் செயலி’ மூலம் விவசாயிகள் விஞ்ஞானமுறை திட்டங்களை அறிந்துகொள்கிறார்கள். இது எல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியாது, பொய் சொல்ல மட்டும்தான் அவருக்குத் தெரியும்.
திமுக என்றால் கலைஞர் குடும்பம், கலைஞர் குடும்பம் என்றால் ஸ்டாலின் குடும்பம் ஆகும். திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கடைக்குக் கடை மாமூல் வாங்குவார்கள். கடைகாரர்கள் எல்லாம் பாத்துக்கோங்க, தமிழகம் தற்போது சாதி சண்டை இல்லாமல் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது” என கூறினார்.