Skip to main content

15 லட்சம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது? தேமுதிக கேள்வி

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
DMDK


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 04.07.2018 புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அமைதியான வழியில் 99 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். 100 வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது அப்பாவி பொதுமக்கள் மீது, தமிழக அரசும் காவல்துறையும் சேர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்ற இந்த கொடிய சம்பவத்தை இச்செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. 

 

 

 

சேலம் – சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை முறைப்படுத்தியும், மக்களின் கருத்துக்களை கேட்டும், அவர்களின் ஒத்துழைப்போடும் நிறைவேற்றுவது மிக அவசியமாகும். சாலை வசதிகளை மேம்படுத்திடவேண்டும் என்பதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மாற்று கருத்து இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமான விளை நிலங்களை காவல்துறையின் ஒத்துழைப்போடு, அவர்களின் அனுமதியின்றி நில அளவீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் இத்திட்டத்தை சிறு, குறு விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றியமைத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
 

காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட காலமாக தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும், விவசாய பெருங்குடிமக்களும் போராடியதன் பயனாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்று உத்தரவுபிறப்பித்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் திரு.மசூத் ஹுசைன் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில உறுப்பினர்கள் 02.07.2018 கூடிய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டுமென்று காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, வருகின்ற 05.07.2018 அன்று நடைபெறவுள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்று கூட்டத்திலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும் கிடைக்கவேண்டிய தண்ணீரை தமிழக அரசு முறையாக பெற்றுத்தந்து, விவசாயிகளின் வாழ்வு வளம்பெறச்செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

 

 

தமிழகத்திற்கு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை தங்களுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் எழுதவிடாமல், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதனால் மாணவ, மாணவிகள் மன அழுத்தத்தின் காரணமாக சரியான முறையில் தேர்வு எழுதமுடியாமலும், அவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்களும், உறவினர்களும் பல இன்னல்களுக்கு ஆளானதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டது. தமிழக அரசின் முதிர்ச்சியற்ற, முரண்பட்ட கல்வி கொள்கைகளினால் தான் மேற்கண்ட சம்பவங்கள் நடைபெற்றது என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுவதுடன், தகுந்த கல்வி நிபுணர்களுடனும் கலந்து, அனைத்து பள்ளிகளும் சிறப்பான நீட் தேர்வு பயிற்சி மையத்தை உருவாக்கிடவும், தேர்வு மையங்களை மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

 

 

 

மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்றும், ஒவ்வொரு ஏழை, எளிய குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்கள். மத்தியிலே ஆட்சி ஏற்று நான்கு ஆண்டுகள் முடிந்தும், இதுவரை ஒரு குடும்பத்திற்கு கூட வங்கியில் பணம் செலுத்தப்பட்டதாக தெரியவில்லை. மேலும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் காரணமாக தொழில் முனைவோர், அனைத்து தரப்பு வியாபார பெருமக்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளானார்கள். கருப்புப் பணத்தை ஒழித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த மக்கள், சுவிட்சர்லாந்து நாட்டு சுவிஸ் தேசிய வங்கியில் 2017-ல் 50% சதவிகிதம் இந்தியர்கள் பணம் அதிகரித்தாக அறிவித்திருப்பது, இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு நடவடிக்கையும், கருப்பு பணத்தை ஒழிக்காத மத்திய அரசின் நடவடிக்கையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்