Skip to main content

“இதைத்தான் நாங்களும் சொல்லியிருக்கிறோம்... இந்த திட்டத்தை பாஜக வரவேற்கிறது” - அண்ணாமலை பேட்டி!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

"This is what we have said ... BJP welcomes this project" -Annamalai interview

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (31.10.2021) கன்னியாகுமாிக்கு வந்தாா். நாகா்கோவிலில் நடந்த சமுதாய பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “நாளை (இன்று) டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள பாா்களைத் திறக்க அரசு கங்கணம் கட்டி தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால், ராமேஸ்வரத்தில் உள்ள 21 தீர்த்த கிணறுகளைத் திறக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். தீா்த்தக் கிணறு திறக்காததால் பலன் எதுவும் கிடைக்காமல் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

 

இந்த 21 தீர்த்தக் கிணற்றை நம்பி 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். அந்த தீர்த்தக் கிணற்றைத் திறக்காமல் கரோனா என்ற காரணத்தை எதற்காக காட்டி வருகிறார்கள் என்று தொியவில்லை. 2021இல் அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனா். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். 7.5% உள்ஒதுக்கீடும் காரணமாக இருக்கலாம். இதையும் முன்னெடுத்து அரசு செய்ய வேண்டும். 'இல்லம் தேடி கல்வி' என்ற அற்புதமான திட்டத்தை அரசு திறம்பட செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால், புதிய கல்வி கொள்கையில் இதைத்தான் நாங்களும் சொல்லியிருக்கிறோம். புதிய கல்வி கொள்கையில் முக்கிய அம்சம் என்பது பள்ளிக்குப் போக முடியாமல் பின்தங்கி இருக்கிற அவா்களை திரும்பப் பள்ளிக்குக் கொண்டுவருவதுதான் புதிய கல்வி கொள்கையின் முக்கிய திட்டம்.

 

இதைத்தான் தமிழக அரசு அவர்களுடைய திட்டத்தின் மூலம் செயல்படுத்தப் போகிறார்கள். இந்த திட்டத்தை பாஜக வரவேற்கிறது. பட்டாசு வெடிக்கிற விஷயத்தில் நாங்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் அழுத்தமாக கூறியிருக்கிறோம், பட்டாசை தடை செய்யக் கூடாது என்று. சுப்ரீம் கோர்ட் சொன்னதைப் போன்றுதான் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 8.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. அதைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுக்கதை. இந்தியாவில் பாரம்பரியமாக 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே பட்டாசு வெடிச்சிட்டு வாராங்க. அப்படியிருக்கையில் அன்னைக்கு மட்டும் தீபாவளிக்கு மாசுபடுதல் என்பது மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவது என்பதாகும்.

 

அமொிக்காவில் ஜீலை 14, ஆஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பா் 31இல் பட்டாசு வெடிக்கும் திருவிழாவில் அன்றைய தினம் மட்டும் மாசுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். தீபாவளி என்பது நம்முடைய பாரம்பரிய பண்டிகை, கலாச்சாரமும் கூட. எனவே மக்கள் பாதுகாப்போடு சந்தோஷமாக பட்டாசு வெடிக்கலாம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்