பொய்யிலேயே வளர்ந்த உருவம் என்றால் அது சசிகலா தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மீன்வளத்துறை அமைச்சர் புயல் பாதித்த பகுதிகளைப் பார்த்ததாகவே தெரியவில்லை. நாங்கள் மகாபலிபுரம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், இவர்கள் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரியவேயில்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் மிகப்பெரிய மதிப்பு உள்ளது. அதனால் தான் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது இல்லை. அதிமுக தான் அவரை அடையாளம் காட்டியது. திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தார். நான் அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்கிறேன் என்றால் என்னை அடையாளம் காட்டியுள்ளது. என் உடம்பில் ஓடும் ரத்தம், உடம்பில் உள்ள உப்பு அனைத்தும் அதிமுக கொடுத்தது. நான் அவரிடம் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். அதிமுகவை சிறுமைப்படுத்தாதீர்கள். சசிகலாவிற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யே உருவான உருவம் என்றால் அது சசிகலா தான்.
அதிமுகவை இணைப்பதற்கான பணியில் சசிகலா ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார். அது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். அதற்கு மேல் என்ன சொல்வது. முதல்வர் தற்போது பொங்கல் பண்டிகைக்கு 5000 ரூபாய் கொடுக்கலாமே. ஏன் 1000 ரூபாய் கொடுக்கிறார்? நாங்கள் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பாரபட்சமின்றி பணம் கொடுத்தோம்.
இவர்கள் கொடுப்பதே 1000 தான். ஆனாலும் இந்த அட்டைகளுக்கு இருக்கிறது. இந்த அட்டைகளுக்கு இல்லை எனக் கூறுகின்றனர். கரும்பை பொறுத்தவரை, விவசாயிகள் நம்பி அதைப் பயிரிட்டனர். தற்போது அவர்கள் கரும்பை எங்குக் கொண்டு செல்வார்கள்” எனக் கூறினார்.