ஒரு பக்கம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தித் திணிப்பிலும் சமஸ்கிருதம் பரப்பலிலும் தீவிரம் காட்டிவரும் நிலையில், பிரதமர் மோடி திடீர் என்று தமிழை கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, மோடியையும், அமித்ஷாவையும் பொறுத்தவரை எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுக்கு கையில் எடுத்திருக்கும் கவர்ச்சியான ஆயுதம் தான் இன்ஸ்டண்ட் தமிழ்க் காதல் என்கின்றனர். பொதுவாக, வடமாநிலத் தலைவர்கள் தமிழகத்துக்கு வரும் போது ’வணக்கம், ’நன்றி’ என்பது போல் ஓரிரண்டு தமிழ்ச் சொற்களை எழுதி வைத்து பேசுவது வழக்கம். அப்படி பேசும் போது தமிழக மக்களிடம் கைத்தட்டல் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதேபோல் சிலர் திருக்குறளில் இருந்தும் சங்க இலக்கியத்தில் இருந்தும் மேற்கோள்களைக் காட்டிப் பேசி இங்கிருப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பார்கள். குறிப்பாக காங்கிரஸின் சீனியர் மோஸ்ட் தலைவராக இருந்த இந்திரா காந்தியில் ஆரம்பித்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை அப்படி தமிழ்ச் சொற்களைக் கலந்துபேசி தமிழக மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்கள். இதையெல்லாம் கவனித்தில் எடுத்து கொண்ட பா.ஜ.க. தரப்பு, இதுபோன்ற அணுகு முறையால் தான் ஒரு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் அது காங்கிரஸ் கூட்டணிக்கே தமிழ்நாட்டில் சாதகமாக இருந்துள்ளது என்று பேசியிருக்கிறார்கள். அதை தற்போது தெரிந்து கொண்ட பாஜக, அதே டெக்னிக்கை கையில் எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
சில மாநிலங்களில் மதத்தையும், சில மாநிலங்களில் சாதீயத்தையும் கையிலெடுத்து அரசியல் செய்து வரும் பா.ஜ.க, பெரியார் வழியிலான திராவிட மண்ணான தமிழகத்தில் சாதியும் மதமும் எடுபடாது என்று தெரிந்து கொண்டு தமிழ் மொழியையே கையில் எடுத்து களமிறங்கியுள்ளார்கள். தேர்தல் வெற்றி ஒரு பக்கம் என்றாலும் குறைந்தபட்சம் "கோ பேக் மோடி" சொல்வதை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறதாக சொல்லப்படுகிறது. பிரதமரின் தமிழ்க் குரலை பா.ஜ.க.வினர் மட்டுமில்லாமல், அ.தி.மு.க. அமைச்சர்களும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.