இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து சுங்க கட்டண உயர்வு 10 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஏற்கனவே கரோனா பெருந்தொற்றால் போக்குவரத்து பிரச்சனை, விலைவாசி உயர்வு என எல்லாவற்றுக்கும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்ந்து விட்டது, பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. இதில் வேலை செய்ய முடியாத நிலை, தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் போய் சுங்க கட்டணத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு தான் சொன்னார் ஒரு சுங்கச்சாவடிக்கும் இன்னொரு சுங்கச்சாவடிக்கும் 60 கிலோ மீட்டர் இருக்க வேண்டும் என்று, அப்படிப் பார்த்தால் 37 சுங்கச்சாவடிகளை நாம் அகற்றியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எடுக்கவில்லை. அதனை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் மாநில அரசு நீதிமன்றத்திற்கு போங்க. மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார் என்றால் இங்கிருக்கின்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ன செய்கிறார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என்ன செய்கிறார். நீதிமன்றத்திற்கு போய் மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப எங்களுக்கு இருக்கின்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இது ரொம்ப மோசமான கோடை காலம். இருப்பதிலேயே, வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டு இந்தாண்டு தான் என பார்க்கப்படுகிறது. வெப்பம் தணிக்கும் கொள்கையை தமிழக அரசு எடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''என்றார்.