ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த வகையில் அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக ஜி20 மாநாட்டிற்காக பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டு இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் ஆதரவாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி அனுப்பியுள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக ஜனவரி 16ல் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. புலம் பெயர்ந்த மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய செயல்முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர இருக்கிறது.
ஜி20 மாநாட்டில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுத்து மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இந்திய சட்ட ஆணையமே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்பதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் அனுப்பியது. மத்திய அரசின் அங்கீகாரம் என்பதன் அடிப்படையில் பார்க்கலாம்.
தற்போது அனுப்பப்பட்ட கடிதத்தை பொறுத்தவரையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அந்த கூட்டத்தை நடத்தினாலும் கூட மாநிலத் தேர்தல் ஆணையம் தான் இந்த கடிதத்தை அனுப்பியது. ஓபிஎஸ் அணி அனுப்பியுள்ள கடிதத்தால் எந்த தாக்கமும் அவர்களுக்கு ஏற்படப்போவது இல்லை.
எங்களைப் பொறுத்தவரையில் இந்த கட்சி கொடி சின்னம் ஒற்றுமை என எல்லாம் எடப்பாடியின் தலைமையில் சிறப்பாக இயங்குகிறது. மேற்கொண்டு ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கட்சி முடிவு செய்யும்” எனக் கூறினார்.