Skip to main content

கலைஞரின் பேனா விவகாரம்; பதிலடி கொடுத்த திமுக தொண்டர்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

issue erecting a monument in the form kalaignar pen

 

"மெரினாவுல தலைவருக்கு பேனா வைக்குறது இருக்கட்டும்.. இப்போ நான் என் வீட்டு வாசலிலேயே பேனா வச்சிக்கிறேன்.." என திமுக தொண்டர் ஒருவர் கலைஞருக்கு பேனா வைத்துள்ள சம்பவம் எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

 

மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

 

இதையடுத்து, சென்னையில் கடந்த 31 ஆம் தேதியன்று, பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால் அதை நான் உடைப்பேன் என ஆவேசமாகப் பேசினார்.

 

இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக தொண்டர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த திமுக தொண்டர் பிரபாகரன் என்பவர், தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு லியோ இல்லம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

 

மேலும், அந்த வீட்டில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை, 16 அடியில் செதுக்கியுள்ளார். அதில், முழுக்க முழுக்க ஃபைபர் மெட்டீரியலால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேனாவை, "தலைவரே.. உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை" என்ற வாசகத்தோடு அமைத்துள்ளார்.

 

கலைஞரின் பேனா சின்னம் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுக தொண்டர் செய்த செயல் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்