தர்மபுரி பாஜக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக தலைமையில் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. 40 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டணி உள்ளது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். தமிழக பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வலுவாகக் கால் பதித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் இருக்கிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராகிவிட்டோம் என்கிற நிலை வரும்பொழுது பேசுகிறோம். முடியாவிட்டால் வேறு வேலைகளைப் பார்ப்போம். முடிகிற நிலை ஏற்படும் வரை நாங்கள் முயற்சிப்போம்.
பாஜக தலைமையில் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றால் தனித்து நிற்போம். கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி ஏற்படும் எனும் நிலை வந்தால் கூட்டணிக்கான முயற்சியை அப்பொழுது எடுப்போம்” எனக் கூறினார்.