10 மாத கால திமுக ஆட்சி முழு திருப்தி அளிப்பதாக மதிமுகவின் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பொதுக்குழுவை பொறுத்தவரை இயக்கத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படும் குறிப்பிட்ட நான்கைந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் பொதுக்குழு கொடுத்திருக்கிறது. பொதுக்குழுவில் இருக்கும் 1,500 பேரில் 1300 பேர் வந்திருந்தார்கள். அவர்களின் மீது முழு ஆதரவு வைகோவிற்கு உள்ளது. இந்த இரண்டு மூன்று பேர் அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது முடிந்தவரை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழுவில் வலியுறுத்தியுள்ளார்கள். திமுக ஆட்சியை பொறுத்தவரை எங்களுக்கு முழு திருப்தி. சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த அந்த தருணம் கோவிட் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. சொத்துவரி உயர்வை பொறுத்தவரை அதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இதற்காக வைகோ நீண்ட அறிக்கையும் கொடுத்திருக்கிறார். கரோனாவிலிருந்து மீண்டு வந்த இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மதிமுக சார்பாக வைத்திருக்கிறார். கண்டிப்பாக அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது'' என்றார்.