நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தொடக்கத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலூர் மாநகராட்சியில் எங்கள் கட்சியின் 24வது வார்டு பாமக வேட்பாளர் பரசுராமனை திமுக மா.செவும், எம்.எல்.ஏவுமான நந்தகுமார் எம்.எல்.ஏ கடத்திச்சென்று அவரை போட்டியிலிருந்து விலக வேண்டும், இல்லையேல் தொழில் செய்ய முடியாது என மிரட்டுகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். பா.ம.க. வேட்பாளரை மிரட்டியவர்கள் மீது தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். அது தேர்தல் சமயத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் தந்த தி.மு.க. மா.செவும், எம்.எல்.ஏவமான நந்தகுமார், ‘பாமக வேட்பாளர் தான் எங்களிடம் வந்து சீட் கேட்டார். பா.ம.க. சின்னத்தில் நின்றால் என்னால் வெற்றி பெற முடியாது; தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் எனக்கு தந்தால் நான் தி.மு.க.வில் இணைகிறேன் எனச்சொன்னார். நாங்கள் எங்கள் கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கிவிட்டோம் எனச் சொன்னோம். பா.ம.க. வேட்பாளரை கடத்திச்சென்று வெற்றி பெறும் நிலையில் தி.மு.க. இல்லை, அவரை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என மறுத்திருந்தார். அதோடு, ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க. மா.செவின் ஹோட்டலுக்கு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு வருவதும், அங்குள்ள ஹோட்டலின் அலுவலக அறைக்கு சென்று அமர்ந்து வேலூர் எம்.எல்.ஏ கார்த்தியுடன் உரையாடுவதும், அந்த அறைக்கு தி.மு.க. மா.செவும், எம்.எல்.ஏவுமான நந்தகுமார் வருவதும் இருவருக்கும் பா.ம.க. வேட்பாளர் சால்வை அணிவித்து உரையாடுவதும் அதில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ பா.ம.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஆனாலும் தொடர்ந்து தி.மு.க. மா.செ – பா.ம.க. மா.செ இடையே அறிக்கை மோதல் நடந்துவந்தது.
வேலூர் மாநகரம் 24வது வார்டில் திமுக வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் பரசுராமன் தோல்வியை சந்தித்தார். பா.ம.க.வுக்கு மறைமுகமாக அ.தி.மு.க.வும் மறைமுக ஆதரவு தெரிவித்திருந்தது. பாமக வேட்பாளரும் அதிகமாகவே செலவு செய்திருந்தார். அதனால் இந்த வார்டு ரிசல்ட் தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க. என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நகர்ப்புற, மாநகர உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, ‘தேர்தலில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆம் 24வது வார்டில் மக்கள் செல்வாக்குள்ள எங்கள் தலைவர் தளபதியின் உதயசூரியனே வெற்றி பெற்றுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.