பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், புகைப்படத்தை தவறாகச் சித்தரித்தது குறித்து தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகி பாபு என்பவர் மேல் காவல்நிலையத்தில் காயத்ரி ரகுராம் புகாரளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவர், “பாஜகவில் இருக்கும் போது எனக்கு பாதுகாப்பு இல்லை என நான் வெளியேறி வந்தேன். பாஜகவில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது வார்ரூம் என்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளார். அவர்கள் ஆடியோ, வீடியோ என்பதை தாண்டி இன்று மார்ஃபிங் செய்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளனர். மிகக் கொச்சையாக இருக்கும் அதைக் குறித்து பொதுவெளியில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளேன். அது ட்விட்டரோடு முடிந்துள்ளது.
யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணாக நான் இதை எவ்வாறு எதிர்கொள்வேன். அதற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிக்க வந்துள்ளேன். மிக வருத்தமாக உள்ளது. கட்சியில் இருக்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது கட்சியினருக்கு தெரியும். அண்ணாமலையின் செயல்களுக்கு விமர்சனத்தை நாம் கூறும்பொழுது, அதற்கு பதில் விமர்சனமாக அளிக்காமல் மிகவும் கொச்சையாக என்னைப் பற்றி பேசிக்கொண்டுள்ளார்கள்.
எட்டு வருடங்களாக பாஜகவில் இருந்துள்ளேன். ஆனால், இவ்வளவு வருத்தத்தை உண்டு பண்ணியது இல்லை. அவர் வந்த பிறகு ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது. கடைசி இரண்டு வருடங்களாக இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் எனக்கு மட்டும் இல்லை, கட்சியில் அதிகமான பேருக்கு உள்ளது. அதை வெளியே சொல்வதற்கு பலரும் பயப்படுகிறார்கள். ஆனால், எனக்கு பயம் இல்லை. என் உயிர் போனாலும் பரவாயில்லை. யாராவது ஒருவர் குரல் எழுப்பினால் தான் இச்செயல்கள் நிற்கும், அல்லது இச்செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும். அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கும்” எனக் கூறினார்.