ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பேனாவை வைப்பதற்கு இப்பொழுது ஸ்டாலின் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. ஆனால், கடலில் போய் பேனாவை வைப்பேன் என்கிறார். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். அதனால் தரையிலேயே வைக்கலாம். இதை எவ்வளவு பேர் எதிர்க்கிறார்கள். மீனவ சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார்கள். மீனவர்களுடைய கோரிக்கை, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்கக் கூட்டம் வைத்தார்கள்.
அப்பொழுது மிகுந்த எதிர்ப்புக் குரல் கொடுக்கப்பட்டது. அதை எல்லாம் இந்த முதலமைச்சர் எண்ணி கலைஞரின் நினைவு மண்டபம் அருகிலேயே ஒரு அழகான பேனாவை அமைக்கலாம். பேனா வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கடலில் வைத்தால் தான் பேனா வைத்த மாதிரி இருக்குமா? தரையிலேயே பேனா வைக்கலாம். ஒரு கோடியில் பேனா வைத்துவிட்டு மீதம் 79 கோடிக்கு எல்லா மாணவர்களுக்கும் பேனா வாங்கி கொடுக்கலாம். அந்த மாணவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எழுதாத பேனாவிற்கு எழுதுகின்ற பேனாவை வாங்கி கொடுக்கலாம்'' என்றார்.