தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கெளதமன். இவர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பண விநியோகம் செய்வதாக புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது ஜனநாயக நேர்மையற்ற தேர்தலாக அரசு இயந்திரங்களால் நடத்தப்படுகிறது. கேட்பாரற்று என்னென்னல்லாம் கீழ்த்தரமான வேலைகளை நடத்த முடியுமா அனைத்து வேலைகளையும் குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நடத்துகிறது. இதனை வேடிக்கை பார்ப்பது என்பது நேர்மையற்ற செயல்.
திமுக 75 கோடி ரூபாயும், அதிமுக 75 கோடி ரூபாயும் கார்களில் வைத்துக்கொண்டு பணப்பட்டுவாடா செய்வதும், பரிசுப் பொருட்கள் கொடுப்பதுமாக உள்ளனர். அதிமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது என்பது ஜனநாயக நாட்டுக்கு அழகல்ல. ஜனநாயக சுடுகாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் இங்கு நடக்கும் இந்தக் கூத்துக்கள்தான்.
மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் இவை அத்தனையும் நாங்கள் எடுத்துச் சொன்னோம். சாமானியர்கள் வந்தால் அவர்களுடைய வாகனங்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். ஆனால் முதலமைச்சர் வண்டியில், அமைச்சர்கள் வண்டியில், திமுகவின் முக்கியமான எம்பிக்கள் வண்டியிலும் பணம் மூட்டை மூட்டையாக வந்து கொண்டே இருக்கிறது. நான் சொல்கிறேன் 150 கோடி ரூபாய் உள்ளே இருக்கு. தேடுதல் வேட்டையை நடத்துங்கள். பணத்தை அபகரித்து அரசு கஜானாவுக்கு எடுத்து வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் சொன்னேன்.
அந்தப் பணம் எங்களுக்கு தெரிந்து இப்போது வரவில்லை. முன்பாகவே வந்திருந்தால் என்ன செய்வது என்று கேட்கிறார். பணம் இருக்கு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். பணம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பணம் கொடுத்துத்தான் ஓட்டுக்களை வாங்கி, இந்த மக்களிடம் இருந்து மீண்டும் கொள்ளையடிக்க வேண்மென்றால் 50 ஆண்டு காலமாக ஆண்ட திமுக, அதிமுகவுக்கு வெட்கம் இல்லையா. 50 வருடமாக நீங்கள் நல்லது செய்திருந்தால் புதிதாக நாங்களெல்லாம் இங்க வந்து நிற்க முடியமா?
இப்படி ஒரு மோசமான நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட எங்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள்.
எந்த தகுதியும் இல்லாதவர்கள், கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பவர்கள் கூச்சமில்லாமல் பணத்தை வைத்து ஓட்டு கேட்க வந்துள்ளார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையம்தடுத்து நிறுத்த வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.