தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. இதற்கிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமெரிக்காவில் சைக்கிளிங் செய்த வீடியோவை வெளியிட்டு, “மாலை நேரம் புதிய கனவுகளுக்குக் களம் அமைக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த பதிவை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரரே நாம் எப்போது இணைந்து சென்னையில் சைக்கிள் ஓட்டலாம்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பதிவைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், “அன்புள்ள சகோதரரே உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது நாம் ஒன்றாகச் சேர்ந்து சைக்கிள் ஓட்டி சென்னையின் இதயத்தை ரசிப்போம். நாம் சைக்கிள் ஓட்டி முடித்தது என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை ஸ்வீட் உடன் ருசிக்கலாம். ஏற்கனவே நான் உங்களுக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் தர வேண்டிய பாக்கி உள்ளது” என உடனடியாக பதிலளித்துள்ளார்.