தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணியில் விசிக ஊரக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. இந்நிலையில் சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை ஏற்றவிடாதது தொடர்பாக முதல்வரைச் சந்திக்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ''இரண்டுநாள் சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் சென்னை வந்ததும் இதுகுறித்துப் பேசுவதற்கு, என்ன நடந்தது என்பதை விவாதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் சேலத்திலும், மதுரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தாற்காலிகமாகத் தள்ளிவைக்கிறோம்'' என்றார்.
ஏற்கனவே வேலூரில் கடந்த 22 ஆம் தேதி திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமா, ''பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கான இடங்கள் கிடைக்கவில்லை, தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு நல்லிணக்கமான முறையிலே பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது'' எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.