குடியுரிமை திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக கூறி இந்தியா முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இதற்கிடையில் டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 38க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பாஜகவினர் பேரணி நடத்தினர். இவ்வாறு இரு தளத்தில் இயங்கக்கூடியவர்கள் ஒரே நேரத்தில் போராட்ட களத்திற்கு வந்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எனக்கு பாதிப்பு வரப் போகிறது. என்னுடைய சந்ததிகள் கேள்விக்குறியாக வந்து நிற்கிறார்கள் என்று எண்ணி அறவழிப்போராட்டத்தில் நிற்க்கும் போது அதற்கு சரியான முறையில் விளக்கம் அளிக்காமல், அந்த போராட்டத்தை கலைப்பதையே நோக்கமாக வைத்திருப்பது ஏற்ப்புடையது அல்ல. போராட்டக்காரர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும் துணைமுதல்வருக்கும் இருக்கிறது. அதை விடுத்துவிட்டு போராட்டத்தை எதிர் கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று நீங்கள் கூறுவதை ஒரு அரசியலாகத்தான் பார்க்கிறேன். உங்களுக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனையை காதுகொடுத்து கேளுங்கள். ஒவ்வொரு முறையும் மக்களின் அறவழிப் போராட்டம் வன்முறையில் முடிந்ததைத்தான் வரலாறாகப் பார்க்கிறோம். தூத்துக்குடியில் நடந்ததை வண்ணாரப்பேட்டையில் நடத்திவிடாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.