அ.தி.மு.க.வில் மிக முக்கிய பொறுப்பு வகித்த நபர்களில் எப்போதுமே வைத்திலிங்கத்திற்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 முதல் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற்ற நால்வர் அணியில் இடம் வகித்தவர். அ.தி.மு.க.வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும், துணை ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வரக்கூடியவர். தொடர்ந்து 2001 முதல் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். 2016-ஆம் ஆண்டு தோல்வியைச் சந்தித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவால் பதவி வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 30 வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. அதோடு இவரையே எடப்பாடி தலைமையிலான குழு டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்தது.
கடந்த 20 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஜெயலலிதா கவனம் செலுத்தி, முதல் முறையாக 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றச் செய்தார். 2011-ல் நடைபெற்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் 32 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. அதன்பின் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியது.
ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் 46 தொகுதிகளில் 40 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவினால் அ.தி.மு.க.வுக்கு 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டாலும், இந்தத் தோல்விக்கு வைத்திலிங்கமும் முக்கிய காரணம் என்கிறார்கள்.
எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. அரசு, கட்சியின் மூத்த நிர்வாகிகளை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. டெல்டா நிச்சயம் நமக்கு கைகொடுக்கும் என்று எடப்பாடி நம்பியிருந்தார். டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை கை கொடுக்கும் என எதிர்பார்த்தார். எனவேதான் பொறுப்பை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தார். ஆனால் வைத்திலிங்கத்தால் அந்த பொறுப்பை சரிவர செய்ய முடியாமல் போனது. அதற்குக் காரணம் மற்ற தொகுதிகளில் அவர் கவனம் செலுத்தினால் தன்னுடைய தொகுதியில் தோல்வி உறுதியாகிவிடும் என்ற பயம் ஒருபக்கம் இருந்ததால், தன்னுடைய தொகுதிக்கான வேலையை மட்டுமே பார்த்தார். அவருக்கு என்று நியமித்த தொகுதிகளில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. 2016-ல் இழந்ததை 2021-ல் மீட்டுவிட வேண்டும் என்ற கவனம் மட்டுமே அவரிடம் இருந்தது என்கிறார்கள் கட்சியினர்.
மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் நாம் தோல்வியை சந்தித்துவிட கூடாது என்று தன்னுடைய தொகுதியில் ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்றும், மற்ற தொகுதிகளுக்கு கொடுத்த பணம் போதுமானதாக இல்லாததால், அவர் தன்னுடைய கையில் இருந்து கரன்சியை கரைக்க விரும்பவில்லை.
தன்னுடைய கட்சி வெற்றி பெறுவதைவிட தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அதிகளவில் இருந்ததாக அ.தி.மு.க.வினரே முணுமுணுக்கின்றனர். பல தொகுதிகளை நேரில் சென்றுகூட அவரால் பார்க்க முடியவில்லை. கள நிலவரங்களை மட்டும் கேட்டறிந்து கொண்டார். உறுதியாக வெற்றிபெற வேண்டிய தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்கூட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
டெல்டாவில் தன்னைவிட வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என வைத்திலிங்கம் கறாராக இருந்ததன் விளைவு, தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பரசுராமன், தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ராஜமோகன், தஞ்சாவூர் நகர கழக முன்னாள் செயலாளர் பண்டரிநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆர்.எம். பாஸ்கர், தஞ்சை தெற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் உள்ளிட்ட அத்தனை பேரையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தலைமைக் கழகம்.
அதேபோல் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை செந்தில், வைத்திலிங்கம் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு குண்டாஸில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இப்படி கட்சிக்காரர்கள் யாரையும் விட்டுவைக்காமல் தன்னைவிட எந்தக் கட்சி நிர்வாகிகளும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக அரசியல்செய்யும் இவரால்தான் ஆட்சியை தவறவிட்டதாக வைத்திலிங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள் சொந்தக் கட்சிக்காரர்களே. வைத்திலிங்கத்தின் பினாமி சொத்து விவரங்களும் கசியத் தொடங்கியுள்ளது.