மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது தொடர்பான கருத்து முரண்கள் தமிழகத்தில் நிலவி வருகிறது. இது குறித்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கியிருந்தார். ''மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வதைக்கண்டு மிரள தேவையில்லை. ஒன்றியம் என்ற சொல் ஒன்றும் தவறான சொல்லல்ல. இனியும் ஒன்றிய அரசு என்று மத்திய அரசை அழைப்பது தொடரும்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ''தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறியதை வைத்து ஒன்றிய அரசு என கூறுவதில் நியாயம் இல்லை. இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதை யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் உணர்த்துகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள திமுக தலைமையிலான அரசு மூட நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என நேற்று திமுகவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.