தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அதே வேளையில் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 12 வார்டுகள் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
58 இடங்களில் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் 56-வது வார்டுக்கு பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் போட்டியிடுகிறார். அதேபோல் 57-வது வார்டில் அவருடைய மனைவி கமலா சேகர் போட்டியிடுகிறார். கமலா ஏற்கனவே கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 56-வது வார்டில் போட்டியிடும் சேகர் ஏற்கனவே 1996 முதல் 2016-ம் ஆண்டு வரை பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் 70 வார்டுகளில் 67 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 இடங்கள் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பட்டியலில் பல்லாவரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தன்சிங்கின் மனைவி தனம் தன்சிங் 13-வது வார்டில் போட்டியிடுகிறார். அதே போல் இவரது மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே பல்லாவரம் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.