சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அதிமுக கட்சி நிகழ்வு ஒன்றில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கூட ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும் போது கடந்த 2 ஆண்டுக் காலத்தில் சிறப்பான ஆட்சி தந்ததாக சொல்கிறார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார். உண்மைதான். அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த துறைக்கு சென்றாலும் லஞ்சம் கொடுத்தால் தான் உங்களுடைய கோரிக்கை நிறைவேறும். அப்படிப்பட்ட ஆட்சி தான் திமுக ஆட்சி.
2011 இல் இருந்து 2021 வரை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கிடையாது. ஏழை மக்கள் ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதிமுக நிறைவேற்றியது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றினார். திமுக தேர்தல் அறிக்கையில் தற்போதைய முதலமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதாமாதம் மின் கட்டணம் கணக்கிட்டு அதன்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்றார். ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. மாதாமாதம் மின் கட்டணம் கட்டினால் மின் கட்டணம் குறையும். ஆனால் அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் ஒருவர் மதுபோதையில் சலசலப்பை ஏற்படுத்தினார். அப்போது அவரிடம் பேசிய பழனிசாமி, “கொஞ்சம் இரு ராஜா.. எனக்கு கால் வேற வலிக்குது. நீ நல்லவன் தான். உள்ள இருக்குறவரு சரியில்லயே.. ஒரு நிமிசம் பொறுப்பா” என சிரித்துக்கொண்டே அவருக்கு பதிலளித்தார். அதற்குள் கூட்டத்தில் இருந்த மற்ற அதிமுகவினர் அவரை அப்புறப்படுத்தினர்.