Skip to main content

“மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் முதல்வர் ஏன் இங்கு வரவேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

"If the people are happy then why should the Chief Minister come here.." - Former Minister O. S. Manian

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

தலைச்சங்காடு, தர்மகுளம், நெப்பத்தூர், மணிகிராமம், திருவாலி, வேட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகள், குடியிருப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில், இளம் சம்பா நாற்றுகள் அனைத்தும் அழிந்துவிட்டது. ஏற்கனவே பெய்த மழையில் பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது ஏற்புடையதல்ல. மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

 

பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு காலக்கெடுவை நீட்டிப்பதுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபடி இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும். இயற்கை பேரிடர் என்று சொல்லும் வகையில் குறுகிய நேரத்தில் பெய்த கனமழை கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களுக்கு பத்திரமாக அழைத்து வந்து அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, அதனை உரிய முறையில் செய்யாததால் மக்கள் அனைவரும் தற்போது அவதியுற்று வருகின்றனர்.  

 

கஜா புயலின் போது மரணம் என்கிற நிகழ்வே இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பருவகால மழை கடுமையாக இருக்கும்; அதுவும் சராசரி மழையை விட அதிகமான மழை இருக்கும்; எங்கெங்கே எவ்வளவு மழை அதிகம் இருக்கும் என முன்னெச்சரிக்கையாக சொல்லியுள்ளனர். இருந்தும், அதிகாரிகள் கடைமடை பகுதி வரை சென்று பாதிப்புகளைப் பார்க்காமல் மேடான பகுதியில் முக்கியச் சாலைகளில் சென்று பார்ப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. 

 

ஐந்தாம் நாளாக வெள்ளம் வடியாமல் இருக்கக் காரணம், வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு அதிகாரிகள் அரசிடம் நிதி கேட்டும் நிதி கொடுப்பதற்கு முன்வராததே ஆகும். தமிழக முதல்வர் பாதிப்பு அதிகம் உள்ள உட்கிராமம் வரை சென்று பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளைப் பார்த்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்க மாட்டார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அவர் வந்திருக்கவே வேண்டியது இல்லை. மக்கள் அவதியுற்று இருக்கிறார்கள் என்பதால் தான் அவர் வந்தார். அவ்வாறு வந்தவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. அவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருப்பார். நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியதாகத் தெரியவில்லை. ஐந்து தினங்களாக மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவித்து வருவது இவர்கள் எடுத்து வரும் வெள்ள நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்” என்றார். 

 

தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த புதைவட மின்கம்பி திட்டம் தோல்வியானது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு, “நிலத்துக்கு அடியில் மின்விநியோகம் செய்யும் திட்டம் நிதி செலவு அதிகம். ஆகையால், தற்போது உள்ள அரசு சம்பளம், பென்ஷன், இரண்டு ஆண்டுகளாக வேலை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பில் வழங்காதது போன்ற காரணங்களால் பஞ்சாயத்து பணங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆகையால், பூமிக்கு அடியில் மின்கம்பி புதைப்பது என்பது கனவில்தான் இவர்கள் காணவேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்