காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் ஒற்றுமை பயணத்தை வியாழன் அன்று தொடங்க இருப்பதால் இன்று இரவு சென்னை வருகிறார்.
இந்தியாவில் இறையாண்மையும் அரசியலமைப்பு சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார். இதன் பொருட்டு இன்று விமானம் மூலம் சென்னை வந்து நாளை காலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன் பின் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஒற்றுமை பயணம் தொடங்கும் இடமான கன்னியாகுமரிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
முன்னதாக இந்த ஒற்றுமை பயணத்தை துவக்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயணத்தை துவங்கிய பின் குமரியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தங்குவதற்கு வசதியாக கேரவன்கள் பொதுக்கூட்டம் நடக்கும் திடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வியாழன் அன்று துவங்கும் ஒற்றுமை பயணம் முதல் கட்டமாக கேரளா நோக்கி செல்ல இருக்கின்றது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பதிவில், "இந்திய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. அந்த நிகழ்வில் தலைவர் ராகுல்காந்தி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை வழங்குகிறார். இதை தொடர்ந்து அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி உரை நிகழ்த்துகிறார்.