தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் அவர் பேசிய பேச்சுக்கள், கூட்டணிக்கு எதிராக இருந்ததாக திமுக தலைமையிடம் கோஷ்டி தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், கூட்டணிக்கு எதிரான எந்தவித முரண்பாடான கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் திருச்சியில் நடந்த குடிநீருக்கான போராட்டத்தில் பேசிய திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனைக்காலம் பல்லக்கு தூக்குவது என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கே.என்.நேருவின் பேச்சை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பதாக தெரிவித்தனர்.
திமுகவின் இந்த கோபம், காங்கிரஸ்சின் டெல்லி தலைவர்கள் வரை பதற வைத்தது. இதற்கிடையே கராத்தே தியாகராஜனுக்கு எதிரான குறிப்பாக ப.சிதம்பரத்திற்கு எதிரானவர்கள் டெல்லி தலைமையிடம் இந்த விசயத்தை ஊதி பெரிதாக்கினர். அதேசமயம், திமுகவின் மூத்த எம்பி ஒருவர் மூலம் கராத்தே தியாகராஜனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் கராத்தே தியாராஜன். இது காங்கிரஸ் - திமுக கட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் முக்கிய ஆதரவாளராக கருதப்பட்ட தியாகராஜன் நீக்கப்பட்டது ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது கருத்தினை முழுமையாக வெளிப்படுத்தாமல் அமைதிக்காத்து வந்த தியாகராஜன், இன்று காலை 10 மணிக்கு ப.சிதம்பரத்தை சந்திக்கிறார்.
அவரது சந்திப்பையடுத்து கராத்தே தியாகராஜன் ஏதேனும் பூகம்பத்தை கிளப்புவாரா அல்லது அமைதியாக இருப்பாரா என்பது தெரியவரும் என்கிறார்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்.