சிவகாசி தொகுதியில் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றுவரும் நிலையில், அவர் வரும் வழியில் சிறுவர்களை வைத்து ‘சீரியஸ்’ அரசியல் பண்ணி, தங்களின் எதிர்ப்பை சிலர் காட்டியிருக்கின்றனர்.
பொதுவாக தேர்தல் களத்தில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என கோஷம் எழுப்ப, அரசியல் கட்சிகள் பலவும் சிறுவர்களைப் பயன்படுத்துவது வழக்கம். இவர்களும் சிறுவர்கள்தான்! ஆனால், செய்த காரியம் பெரியது.
மினி கிளினிக் திறப்பு விழா, உயர் கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா, ஆவின் பால் நிலையங்கள், நியாயவிலைக் கடைகள் திறப்பு விழா என ராஜேந்திரபாலாஜி பிசியாக தொகுதியை வலம் வந்தபோது, அவருடைய வாகனம் சென்ற வழியில் சிறுவர்கள் சின்னதாக ஒரு காட்டு காட்டிவிட்டார்கள். எப்படியென்றால், அமைச்சர் அந்த ஏரியாவுக்கு வருவதற்கு முன்பாகவே, கையில் கொட்டும் குச்சியுமாக தயாராகிவிட்டனர். ‘ஸ்டாலின்தான் வாராரு.. விடியல் தரப் போறாரு..’ என்பதோடு, ‘திருமாவளவனும் வாராரு.. விடியல் தரப் போறாரு..’ என்ற கோஷத்தையும் சேர்த்து எழுப்பி ‘ரிகர்ஸல்’ பார்த்துக்கொண்டனர். பிறகு, அமைச்சரின் கார் அவர்களை ‘க்ராஸ்’ செய்தபோது, குஷியாக அதே கோஷத்தை மீண்டும் எழுப்பி குதிக்கவும் செய்தனர்.
சிறுவர்களைக் கொண்டு யாரோ ஆரம்பித்து வைத்த அரசியல் விளையாட்டால், பணியில் கவனம் இல்லை என ‘டோஸ்’ விழுந்து, மண்டை காய்ந்துபோனது காவல்துறையினர்தான்.