கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் தர்மேந்திரா பிரதான் ஆகிய இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், "காங்கிரஸ் கட்சியினர், அதிலும் குறிப்பாக நேரு - காந்தி குடும்பத்தினர் தங்களுக்கு தண்டனை விதிக்க முடியாத தனி இந்திய தண்டனை சட்டத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு என தனி நீதித்துறை வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். ராகுல் காந்தி வழக்கமான குற்றவாளி. எந்த விளைவுகளையும் சிந்திக்காமல் எதையும் சொல்ல முடியும் என்று நினைக்கிறார்.
ராகுல் காந்தி தன்னை எப்போதும் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் நாட்டிற்கும் மேலாக கருதுகிறார். ராகுல் தற்போது 7 வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் பாஜகவுக்கோ மத்திய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை. மேலும், ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தை அணுகாததற்கு காங்கிரசுக்குள் ஒரு சதி இருக்கலாம் எனக் கருதுகிறோம். காங்கிரஸ் காட்சியிலேயே ராகுல் காந்தியை அகற்ற விரும்புபவர்கள் யார்?" எனப் பேசியுள்ளனர்.