நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 ஆவது முறையாகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (09.04.2024) சென்னை வந்திருந்தார். 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை, வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை புரிந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.