திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை மிகவும் விமர்சித்து பேசினார். அவரது பேச்சு மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து மக்களவையில் சுமார் 38 உறுப்பினர்களை திமுக கூட்டணி பெற்றுள்ளது. 22 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் உதயநிதி கட்சிக்காக ஆற்றிய களப்பணியை பார்த்த திமுக மூத்த தலைவர்கள், எதிர்வரும் காலங்களில் அவர் மேலும் சிறப்பாக செயல்பட அவருக்கு நல்லதொரு கட்சி பொறுப்பை வழங்க வேண்டும் என ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், ஸ்டாலினுக்கு முதன் முதலாக திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுத்தார். அந்த வழியில் உதயநிதிக்கும், அவரது தந்தையும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் இளைஞர்களையும் அவர்களது வாக்குகளையும் திமுகவின் பக்கம் ஈர்க்க முடியும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து நீண்ட யோசனை மற்றும் ஆலோசனைக்கு பிறகு உதயநிதிக்கு, கட்சியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான இளைஞரணி செயலாளர் பதவியை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 3 மணி அளவில் அறிவிக்கப்படுகிறார்.
உதயநிதி இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதன் பிறகு அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு இளைஞர் அணிக்காக தேனாம்பேட்டையில் கட்டப்பட்டுள்ள அன்பகத்துக்கு சென்று பணியை தொடங்குகிறார். கட்சி மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார்.