தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தீவிர முனைப்புடன் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன. அந்தவகையில், காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அதிமுகவும் பாஜகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலா அமைதியாகக் காய்களை நகர்த்திவருவதாகச் சொல்லப்பட்டது. கடந்த, 24-ஆம் தேதி அன்று சரத்குமார், சீமான், அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்தனர். இதுவெறும், மரியாதை நிமித்தாமண சந்திப்பென்றே சொல்லப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். அடுத்த சில மணி நேரங்களில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஐ.ஜே.கே.-வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த அமமுக பொதுக்குழுவில், 'தினகரனை முதல்வர் ஆக்க அயராது பாடுபட வேண்டும்' என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தினகரன் அறிவித்தார். இதனால், சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, தனது முதல் அசைன்மென்ட்டாக பாமகவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை ஒருவழியாக இறுதி செய்துவிட்டார். 'உள்இடஒதுக்கீட்டை வழங்கியதால்தான் குறைவான தொகுதிக்கு ஒப்புக்கொண்டோம்' என அன்புமணியே அறிவித்துள்ளார். இதன்மூலம், தொகுதிப்பங்கீட்டில் பாமக திருப்தியாக உள்ளதாகவே தெரிகிறது. அதேசமயம், சமகவை அதிமுகவிடம் இருந்து பிரித்தது போலவே பாமகவையும் பிரிக்க நினைத்த தினகரன் தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளது.