அ.ம.மு க.விற்கு பொதுச் சின்னம் கிடைத்ததில் குஷியாகியிருக்கிறார் தினகரன். தினகரனுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதால் பொதுச்சின்னம் அவருக்கு எளிதாகக் கிடைத்துள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
பாஜகவுக்கு எதிரான சிறுபான்மை வாக்குகளும், அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளும் திமுக கூட்டணிக்கு செல்வதை தடுப்பதற்காக தினகரனுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதையும் அதற்கான காரணங்களையும் கடந்த வாரம் விரிவாக எழுதியிருந்தோம். அதனை நிரூபிக்கும் வகையில் தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைக்க உதவி செய்திருக்கிறது பாஜக தலைமை.
இது குறித்து பாஜக தலைமைக்கு நெருக்கமான தமிழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் திமுகவிற்கு செல்லும் போதுதான் அதன் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அதனை தடுப்பதற்கு பாஜக தூக்கிப்பிடிக்கும் முகம்தான் தினகரன். அதே சமயம், தனது வெற்றி சின்னம்மான குக்கர் சின்னம் அ.ம.மு.க.விற்கு கிடைக்க உதவி செய்ய வேண்டும் என அமீத்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தார் தினகரன்.
இது குறித்து பாஜக தலைமை, தேர்தல் ஆலோசகர்களிடம் விவாதித்தபோது, 'குக்கர் சின்னம் அவருக்கு கிடைத்தால் அவர் வலிமையடைய வாய்ப்பிருக்கிறது' என சொன்னதன் அடிப்படையில் அதனை கிடைக்கவிடாமல் செய்தது பாஜக தலைமை.
இந்த நிலையில், அப்செட்டான தினகரன் தரப்பு, 'குக்கரை முடக்கிவிட்டீர்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சுயேட்சை சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டால் உங்கள் திட்டம் நிறைவேறாது. அதனால், பொதுச்சின்னம் கிடைக்க உதவி செய்யுங்கள்' என வலியுறுத்தியது.
அதனை பல விவாதங்களுக்கிடையில் ஒப்புக்கொண்டது பாஜக. அதற்கேற்ப சில அட்வைஸ்களை தேர்தல் ஆணையத்துக்கு செய்தது. இதனைத் தொடர்ந்துதான், குக்கர் சின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதிலை ஏற்றுக்கொண்டதுடன், தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட பொதுச்சின்னம் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
உத்தரவின் படி பரிசீலித்தது தேர்தல் ஆணையம். பரிசீலிக்கத்தான் சொல்லப்பட்டதே தவிர பொது சின்னம் தர வேண்டும் என உத்தரவிடவில்லை அதனால், பொதுச் சின்னம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. மேலும், பதிவு செய்யப்பாடாத கட்சி என்கிற விதியை வைத்துத்தான் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்தது தேர்தல் ஆணையம்.
அப்படியிருக்க, பதிவு செய்யப்படாத தினகரன் கட்சிக்கு பொது சின்னம் எப்படி ஒதுக்க முடியும்? பதிவு செய்யப்பட்ட பல கட்சிகளுக்கு, முந்தைய தேர்தலில் அக்கட்சிகள் போட்டியிட்ட சின்னத்தை மீண்டும் இந்த தேர்தலில் வாங்க முடியவில்லை. தருவதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இப்படியிருக்கும் நிலையில், பதிவே செய்யாத தினகரன் கட்சிக்கு பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது எனில், தினகரனுக்காக பாஜக செய்த உதவிகளை உணர்ந்துகொள்ள வேண்டும். பாஜகவின் அழுத்தம் இல்லாமல் தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைத்திருக்காது" என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
பொதுச்சின்னம் கிடைத்ததும் அமீத்சாவிற்கு தினகரன் நன்றி தெரிவித்திருப்பதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தினகரன் இருப்பதாக சொல்லப்படுவது குறித்து தமிழக அரசியல் ஆய்வாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் நாம் பேசியபோது, "பாஜகவுக்கு எதிரான சிறுபான்மை வாக்குகளை திசைத்திருப்ப தினகரனை பாஜக உருவாக்கியிருப்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால், முக்குலத்தோர் வாக்குகளை மட்டுமே தினகரனால் பெறமுடியும். சிறுபான்மை வாக்குகள் ராகுல்காந்தியின் பக்கம் செல்லவே அதிக வாய்ப்புண்டு " என்கிறார் அழுத்தமாக.
தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைத்தது எப்படி ? என்கிற கேள்விதான் திமுக கூட்டணி கட்சிகளிடத்தில் எதிரொலிக்கிறது.