தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில், 40 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கிறோம். என்னைவிட ஒரு சதவீதம் அதிகமாக அண்ணாமலை வாக்கு வாங்க முடியுமா என்று கேட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “சவாலுக்கு தயார். ஒரு சதவீதம் அல்ல 30% அதிகமான வாக்கு வாங்குகிறோம். நாம் தமிழர் எனும் கட்சி 2024க்குப் பிறகு இருக்காது. இளைஞர்களிடம் வெறுப்பை விதைத்து ஒரு கட்சியை நடத்த முடியாது. நாம் தமிழர் கட்சி, மத்தியில் ஆட்சியில் இருக்கிறதா அல்லது மாநிலத்தில் ஆட்சிக்கு வரப் போகிறதா? அவர்களின் கொள்கைகள் என்ன?
தனி மனித அடிப்படையில், சீமானின் பல கருத்துக்களுக்கு நான் ஆதரவு சொல்லியுள்ளேன். ஆனால் தேர்தல் என்று வரும்போது யார் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வருகிறார்கள் என்று பார்த்துதான் வாக்கு செலுத்துவார்கள். இந்த சவாலை எங்கள் தொண்டனே ஏற்றுக்கொள்வான்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், நான் தனியாக போட்டியிடத் தயார் அண்ணாமலை தனியாகப் போட்டியிடத் தயாரா என்று கேட்கிறாரே? எனக் கேட்டதற்குப் பதில் அளித்த அவர், “அண்ணாமலையின் அபிப்ராயமும், பாஜகவின் டெல்லி அபிப்ராயமும் உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே என் கருத்துகளை உரக்கத் தான் சொல்லி வருகிறேன். இன்று யாரெல்லாம் நம் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்களோ, அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
யாரும் அவரை சேர்த்துக் கொள்ளாததால் சீமான் தனியாக நிற்கிறார். என்.டி.ஏ. கூட்டணியின் தலைமையாக இருக்கக் கூடிய பாஜகவை இத்தனைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டு 25 ஆண்டுகளாக எங்களுடன் பயணம் செய்கின்றனர். அதனால் நாங்கள் எப்படி தனியாக போவோம் என்று சொல்ல முடியும். சீமான் சினிமா நடிகராக இருக்கும்போதே என்.டி.ஏ. கூட்டணி வந்துவிட்டது. அப்போது அவர் அரசியல்வாதி கூட கிடையாது. அதனால், தரவுகளை புரிந்துகொண்டு சீமான் பேச வேண்டும்.
சீமானின் கொள்கை பேச்சு எல்லாம் இன்று தமிழ்நாட்டில் வேண்டும். காரணம், திமுகவை எதிர்க்க நமக்கு நிறைய ஆட்கள் வேண்டும். திமுகவின் தவறுகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்ட வேண்டும். கட்சி கொள்கையின் அடிப்படையில் நாங்கள் இருவரும் எதிரும் புதிருமாகத் தான் இருக்கோம். ஆனால், அவரின் கொள்கையை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவரின் கொள்கை ஆக்கப்பூர்வமானது கிடையாது என்பது என் வாதம்” என்று தெரிவித்தார்.