கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் அ.ம.மு.க. சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று (21-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்வதற்காக நேற்று (20-10-23) கோவை வந்தார். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. கட்சி அழிந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அழிய போகிறவர்கள் அடுத்தவர்களை பார்த்து பேசுவது போல் உள்ளது. துரியோதனன் கூட்டம் எப்போதும் வெற்றி பெற்றது கிடையாது. அது போல் தான் எடப்பாடி பழனிசாமியும் வீழப் போவது உறுதி. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்தால் அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் இடையே அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்கிறது.
பிரிந்து சென்ற அ.தி.மு.க. தலைவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் இல்லை. எந்த காரணத்தை கொண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தன. தற்போது பிரிந்துவிட்டது என்று பார்க்க வேண்டும்” என்று கூறினார்.