வருகின்ற மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி,சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியையும், முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். பின்னர் அமமுக-திமுக இடையே உறவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற கருத்தை தங்க தமிழ்ச்செல்வன் கூறினார் என்று டிடிவி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் ''கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக சசிகலா தேர்ந்தெடுத்தார்.எடப்பாடி பெரிய பில்கேட்ஸ் போல காதோடு மைக் மாட்டி பிரச்சாரத்தில் பேசி வருகிறார். 23-ம் தேதி எடப்பாடி ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு எட்டப்பனைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இப்போது இரண்டு எட்டப்பன்களை நான் பார்க்கிறேன்'' என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக முதல்வர், துணைமுதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லோரும் வளையல் போடுவதுபோல கைகளில் கயிறு கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று சொன்ன தே.மு.தி.க-வுடனும், ஜெயலலிதா குற்றவாளி அவர்களுக்கு எதுக்கு மணிமண்டபம் என்று கேட்ட பா.ம.க-வுடனும் கூட்டணி வைத்துள்ளார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால், 3 எம்.எல்.ஏ-க்களுக்கு அவசர அவசரமாக நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது. இனி எடப்பாடி பழனிசாமியை நோட்டீஸ் பழனிசாமி என்றுதான் கூற வேண்டும் என டிடிவி.தினகரன் பிரச்சாரத்தின் போது விமர்சனம் செய்துள்ளார்.