தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து ஒரு வாரப் பத்திரிகையின் பொன்விழா ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கள் சர்ச்சைகளை உருவாக்கியது. பெரியாரின் கொள்கைகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அந்த உரத்த குரல் இன்னமும் ஓயவில்லை.
தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என அடையாளப்படுத்திக்கொள்ளும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது தைலாபுரம் தோட்டத்தில் பெரியாருக்கு சிலை அமைத்துப் போற்றி வருபவர். அந்த வகையில் ரஜினிக்கு எதிராக ராமதாஸ் அறிக்கை வெளியிடுவார் என எதிர்ப்பார்த்தனர். குறைந்தபட்சம் பாமக கட்சி சார்பிலாவது அறிக்கை வரும் என நினைத்தனர். தமிழகம் மற்றும் தேசிய அளவிலான ஒவ்வொரு பிரச்சனையிலும் தனது கருத்தை வெளியிடும் ராமதாஸ், பெரியார்- ரஜினி விவகாரத்தில் இதுவரை கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை.
தமிழக அரசியலில் இது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதுடன் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இது குறித்து பாமக மற்றும் ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது,’’வட தமிழகத்தில் 120 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாமகவிற்கு செல்வாக்கு இருந்தாலும் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பது திமுகதான். வட தமிழகத்தில் அதிமுகவை விட வலிமையாக இருக்கும் திமுகவை வீழ்த்துவதில் பாமக அக்கறை காட்டி வருகிறது. அதேபோல, ரஜினியும் இந்த விசயத்தில் அக்கறை காட்டியிருக்கிறார்.
திமுகவை தங்களின் பொது எதிரியாக கருதும் பாமகவும் ரஜினியும் கைக்கோர்க்க வேண்டும் என இரு தரப்பும் திட்டமிட்டிருக்கிறது. நேரடி அரசியலுக்கு வருவதில் ரஜினி உறுதியாக இருப்பதால், திமுகவை வீழ்த்த பாமகவின் உதவி தேவை என அவரிடம் அரசியல் ஆலோசகர்கள் பலர் விவரித்திருக்கிறார்கள். ரஜினியும் அதற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
அதேபோல, டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் ரஜினியுடன் கைக்கோர்ப்பதில் 100 சதவீத விருப்பத்துடன் இருக்கின்றனர். ஒரு மானசீக காதல் இரு தரப்பிலும் உருவாகியிருக்கிறது. அதனால்தான் பெரியார்-ரஜினி சர்ச்சையில் மௌனம் சாதித்து வருகிறார் ராமதாஸ். அந்த வகையில், ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது தமிழகத்தில் பல கூட்டணிகள் சிதறும்‘’ என சுட்டிக்காட்டுக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.