Skip to main content

என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க... அமைச்சர்களை அதிர வைத்த எடப்பாடி... விரைவில் அதிமுகவில் மாற்றம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்றும், முரசொலி வைத்திருத்திருந்தால் திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அதிமுகவில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அதிமுகவில் ஒரு அமைச்சர் மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். 

 

admk



அதே போல் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் சசிகலா குறித்த கேள்விக்கு சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும், அவர் சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது என்று கருத்து கூறினார். இந்த கருத்துக்கும் அதிமுகவில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவந்தன. மேலும் சிவகங்கையைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன், பாஜவை எப்போது கழட்டி விடலாம்னு நாங்கள் நினைக்கிறோம்னு பேட்டி கொடுத்தார். இது எடப்பாடிக்கு தெரிந்ததும், அமைச்சர் பாஸ்கரனை அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு மாலையிலேயே தான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் பல்டி அடித்தார். அதேபோல, ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கருப்பணன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி பேச ஆரம்பித்தனர். இது கட்சிக்குள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதோடு ராஜேந்திர பாலாஜியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். 

 

admk



இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து அமைச்சர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அமைச்சர்களை தனியாக அழைத்து தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியதாக பேசிக் கொள்ளப்படுகிறது. 


அதே வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து மக்கள் மனதில் உள்ள தவறான கருத்துகளை போக்க எது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கும் அமைச்சர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றி விடுவேன் என்றும் எச்சரித்து அனுப்பியுள்ளதாக சொல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்