தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்துவருகின்றன. இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த கூட்டத்தில் காளைகள் புகுந்ததால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். காளைகள் வழி தெரியாமல் நாலாபுறமும் ஓடியதால், மக்களும் அவைகளிடமிருந்து தப்பிக்க முண்டியடித்துக்கொண்டு ஓடினர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காளைகள் அங்கிருந்து சென்றதற்குப் பின்னர் மீண்டும் பரப்புரை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.