ஆர்.கே.நகரில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு மறுபடியும் போட்டியிடுவதற்கு சூழல்கள் ஒத்து வரவில்லை என்பதால் தனது சமூகம் சார்ந்த முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தேனி மாவட்டத்திலும் போட்டியிட யோசனை செய்திருக்கிறார். அங்கே தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் பலத்தோடு இருப்பதால் கரையேறுவது சுலபமில்லை என்று அறிந்திருக்கிறார். அதையடுத்தே அ.ம.மு.க.வின் தென் மண்டலப் பொறுப்பாளரான கடம்பூர் மாணிக்கராஜாவின் திட்டப்படி தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறார் அ.ம.மு.கவின் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன்.
காரணம், தொகுதி மறுசீரமைப்பின்படி கோவில்பட்டி தொகுதியில் தேவர் சமூக மக்களின் ஏரியாக்கள் இணைக்கப்பட்டதால், அந்தச் சமூக மக்களின் வாக்குகள் தொகுதியின் வாக்கு வரிசையில் முன்னணிக்கு வந்தது. மேலும், தன் கட்சியின் கடம்பூர் மாணிக்கராஜாவின் துணையோடு கரையேறிவிடலாம் என்ற திட்டத்தில் டி.டி.வி. தொகுதி மாறியிருக்கிறார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர். தவிர அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தொகுதி என்பதால் அவருக்கும் இந்தப் போட்டி சவாலானதாக இருக்கும் என்பதும் அவர்களின் கணிப்பு. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பொருட்டு நேற்றைய தினமே கோவில்பட்டி வந்த தினகரன், கடம்பூர் மாணிக்கராஜாவின் இல்லத்தில் தங்கினார்.
மாணிக்க ராஜாவின் ஏற்பாட்டின்படி, தொண்டர்கள் திரள இன்று நண்பகல் 2 மணியளவில் கோவில்பட்டி தொகுதிக்கான தனது வேட்பு மனுவை கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் தாக்கல் செய்தார் தினகரன். அவருடன் மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா மற்றும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி., “1988லிருந்தே கோவில்பட்டி தொகுதியை நான், நன்கறிவேன். கோவில்பட்டி அ.ம.மு.க.வின் கோட்டையாக்குவேன். ஆடி மாதத் தள்ளுபடி போல் இருக்காது எங்கள் தேர்தல் அறிக்கை” என்றார்.
ஆரம்ப கட்டத்திலேயே தனது வேட்பு மனுத் தாக்கலின் நிகழ்வையே கட்சியினர் சூழ பரபரப்பாக்கியிருக்கிறார் டி.டி.வி. தினகரன். அவரது போட்டியால் கோவில்பட்டி தேர்தல் களம் சூடேறத் தொடங்கியிருக்கிறது.